Monday, 12 January 2026

நாவல் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, புனையப்படும் ஒரு தீண்ட கதை நாவல் எனப்படும்.அது உரைநடையில் அமைவது. கண்முன் நாம் காணும் வாழ்க்கையிலிருந்து கண்டு. கேட்ட சில நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக உருவாக்கப்படும் ஒரு கதை அதன் அடிப்படையில் ஒரு கருத்து முதன்மையானதாக வலியுறுத்தப்படும்.

அதில் இடம்பெறும் கதை மாந்தர்கள், அவர்களுடைய உணர்வுப் போராட்டம், கதை நிகழும் இடம்,காலம். பேசும் மொழி என்பன யாவும் உண்மை. அவை அனைத்தும் ஓர் ஒழுங்குமுறையில் கதையாகப் பின்னப்படும்போது கற்பனை கலக்கிறது. படிக்கும் வாசகனுக்கு எது கற்பனை எது உண்மை எனப் பிரித்தறிவது கடினம். ஆனால் கதையாசிரியனுக்கு மட்டுமே அது தெரிந்த ரகசியம்.

'உரைநடையில் அமைந்து ஆண், பெண்களாகிய கதை மாந்தர்களின் வாழ்க்கை உணர்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகளைச் சித்திரித்துக் காட்டுவது நாவல்' என்று இதை அகராதி விளக்கும். 'எழுதப்பட்ட காலத்தில் உண்மையான மனித வாழ்க்கை யையும் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியம் நாவல்' என்று திறனாய்வாளர் விளக்குவர். நாவல் என்பது ஆங்கிலச் சொல்லின் நேரான தமிழ்வடிவம். புதினம் என்ற சொல்லால் இது அழைக்கப்படுகிறது. பழைய காலத்தில் வாய்மொழிக் கதைப்பாடல், செவ்வியல் இலக்கியமான காப்பியம்.

புராணம் போன்றவைகளுக்கு இணையாக இன்று நாவல் அனைவராலும் படிக்கப்படுகிறது. அதனால்தான் தொடக்க காலத்தில் இதனை வசன காவியம் என்று அழைத்தனர், நாவலாசிரியர், நாவலின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களுக்குச் சொல்ல விரும்பினர். எனவே அது பொழுதுபோக்கையும் அறிவுறுத்தலையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.

தமிழில் 1879-இல் வேதநாயகம் பிள்ளை 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் முதல் நாவலை எழுதினார். இன்றுவரை தமிழில் நாவல்கள் ஏராளமாகப் பெருகி உள்ளன. பல்வேறு வகைகளாக நாவல் அமைந்துள்ளது. நாவல் என்ற இலக்கிய வகை தொடக்க வரி முதல் முடிவு வரி வரை மிகவும் செறிவாகவும் கட்டுத்திட்டத்துடனும் கூடியதாக அமைந்திருக்கும்.

இது அதன் உருவம் எனப்படும். பழைய காலக் கதை இலக்கியங்களில் இந்தச் செறிவைக் காண முடியாது. இது பின்வரும் சிறுகதை, குறுநாவல் ஆகியவற்றிற்கும் அடிப்படை யானது. நாவல் உரைநடையில் அமைவதால் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது.

நாவலின் கூறுகள்

நாவல் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறுகிறது. அது கரு (Theme) எனப்படும். சுருவிலிருந்து குஞ்சு வெளிவருவது போலக் கதை தோன்றுவதற்கு இந்தக் கருத்து அடிப்படையாகிறது. நாவலின் கதை நிகழ்ச்சிகள் யாவும் ஒன்றிணைந்து கதைப்பின்னலாக (Plot) அமைக்கப்படுகிறது. ஒரு நிகழ்ச்சிக்கும் அடுத்த நிகழ்ச்சிக்குமிடையே தருக்க முறையிலான, காரணகாரியத் தொடர்பு அமையுமாறு இது பின்னப்படும்.

இந்த முறையில் கதை நிகழ்ச்சிகள் யாவும் அமையும். சுருவை விளக்குமாறு, கதைப்பின்னல் அமையும். அது நெகிழ்ச்சி யானதாக அமையலாம்; செறிவானதாகவும் அமையலாம். பொதுவாகச் சிறந்த நாவல், செறிவான கதைப்பின்னலைக் கொண்டிருக்கும்.

நாவலில் இடம் பெறும் நிகழ்ச்சிகள், அதன் சுரு ஆகியவற்றை விளக்கக் கதை மாந்தர்கள் இடம் பெறுவர். எனவே கதைமாந்தர் படைப்பு அடிப்படைக் கூறு.

அவர்களுடைய உணர்ச்சிப் போராட்டம், அனுபவம், பண்பு நலன்,ஆளுமை என்பன நாவலில் இடம் பெறும். அவர்களைக் கொண்டு வாழ்க்கை நமக்குக் காட்டப்படும் அதற்கேற்ப, நிகழ்ச்சிகள் நடைபெறும், இடம், காலம் கொண்ட பின்னணி அமையும்.

இவையாவும் உண்மையான நடப்பியல் தன்மையுடன் அமையும். எனவே கதை மாந்தர்கள் பேசும் உரையாடல், கதை கூறும் ஆசிரியரின் மொழி ஆகிய நடைக்கூறுகள், இயல்பான வட்டாரப் பண்பும் சாதிப்பண்பும் கொண்டதாக அமையும்.

கதை கூறும் முறை கதை கூறும் உத்தி எனப்படும். கதையாசிரியரோ, கதையில் வரும் மாந்தரோ, வாசகனுக்குக் கதை கூறலாம். இது நோக்கு நிலை எனப்படும். நாவல் முழுவதும் கதை மாந்தர்களின் உரையாடலாகவும் எண்ண ஓட்டமாகவும், ஆசிரியர் எடுத்துரைப்பதாகவும் அமையும் கதை ஒரே சீராகத் தொடக்க முதல் முடிவு வரை கால ஒழுங்கின்படி அமையலாம். அல்லது காலம் முறைமாறி முன்பின்னாகவும் அமையலாம். இதற்குப் பின்னோக்கு, வருவது கூறல் ஆகிய உத்திகள் பயன்படும்.

 தேவையான இடங்களில் கதைமாந்தரின் எண்ண ஓட்டத்தில் பின்னோக்கு அமையும். கதை மாந்தர் மன எண்ணங்களை அப்படியே காட்டுவதற்கு நனவோடை உத்தி பயன்படும். அடிமன உணர்வுகளையும், கால முறைப்படி இல்லாமல் முன்னும் பின்னும் மனம் ஊஞ்சலாட்டம் ஆடுவதையும் விளக்க நனவோடை பயன்படுகிறது.

தேவையான சமயங்களில் கதைமாந்தரின் நாட்குறிப்பு, கடிதம் ஆகியவை கதை கூறுவதற்குப் பயன்படுத்தப் படும். இவை நாவயின் அடிப்படைக் கூறுகள். இவை சிறுகதை, குறுநாவல் ஆகிய வகைகளுக்கும் உரிய பொதுவான கூறுகள். திறனாய்வு செய்ய இவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாவலின் வகைகள் 

நாவல் பொதுவாகச் சமூக நாவல், வரலாற்று நாவல் என இரு பெரும் பிரிவாகப் பகுக்கப்படும். வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து எழுதப்பெறுவது வரலாற்று நாவலாகும். அது பெரும்பாலும் அற்புத நவிற்சியாக (Romance) அமைவதால் நடப்பியலுக்கு மாறுபட்டதாகிவிடுகிறது.

 வாலாற்றுக் கற்பனையாக அது அமைகிறது. மாறாகச் சமூக நாவல், நடப்பியல் தன்மையோடு அமைகிறது.அதனாலே சமூக நாவல், சமூக ஆவணம் என்ற தகுதியைப் பெறுகிறது. தனி மனிதப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட தனி மனித நாவல், குடும்பச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட குடும்ப நாவல். சமூகப் பிரச்சினைகளைப் பேசும் சமூக நாவல் என்று பகுக்கப்படும்.

நாவலில் இடம் பெறும் அதன் பின் புலமான இடம் குறிப்பிட்ட வட்டாரம் ஒன்றின் முழுமையான மக்கள் வாழ்வியலை அவர்களுடைய பண்பாட்டு மரபுகளை வட்டார மொழியிலே எழுதுவது வட்டார நாவலாகும். அரசியல் பிரச்சினைகளை மையமிட்டு எழுதுவது அரசியல் நாவல்.

 அறிவியல் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது அறிவியல் நாவல் வாசகர் பொழுது போக்கிற்காகப் படைக்கப்படுவது துப்பறியும் நாவல், மர்ம நாவல், குற்றவியல் நாவல் என்பவையாகும்.

 இவை ஐரோப்பிய மொழிகளில் காணப்படும் வகைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதப்படுபவை. காணாமல் போன ஒன்றை தேடித்துப்பறிவது, மர்மத்தை அறிவது, குற்றத்தைக் கண்டுபிடிப்பது என்ற நிலைகளில் இந்த நாவல்கள் அமையும்.

பெண் உரிமையை முதன்மைப் படுத்தி எழுதப்படுபவை பெண்ணியமாகும். சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு சம உரிமை வேண்டித் தலித்திய நாவல்கள் படைக்கப்படுகின்றன. இவையாவும் நாவலின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வருக்கப்பட்ட வகைப்பாடு.

நாவல் எழுதும் உத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு நனவோடை நாவல், நேர்கோடற்ற எழுத்து நாவல் என்றெல்லாம் வகைப்படுத்தப் படுகின்றன. நாவல் இலக்கியத்தைத் திறனாய்வு செய்யவும், நாவல் படைக்கும் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும், நாவல் வகைபற்றி அறிவது அவசியமாகிறது.

Comments


EmoticonEmoticon